< Back
மாநில செய்திகள்
வேடங்கிநல்லூர் கிராமத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

வேடங்கிநல்லூர் கிராமத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

தினத்தந்தி
|
24 March 2023 4:31 PM IST

திருவள்ளூரில் உள்ள வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி அளித்து அரசாணை பிறப்பித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகர் மன்ற கூட்டம்

திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் நகர் மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நகராட்சி வளர்ச்சிப் பணிகள், பாதாளச்சாக்கடை திட்டம், தெரு விளக்கு, சுடுகாடு, வரி, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது. கொசுத் தொல்லையை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. அதே போல் ஆக்கிரமிப்பு பகுதிகளை கண்டறிந்து அகற்றிடவும் நகரமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ரூ.33 கோடியில் பஸ் நிலையம்

இந்த கூட்டத்தில் திருவள்ளூர் நகராட்சியை ஒட்டிய வேடங்கிநல்லூர் கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைத்திட ரூ.33 கோடி நிதி அளித்து அரசாணை பிறப்பித்த தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கும், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் பூண்டி ஒன்றியம், சிறுவானூர் பஞ்சாயத்திற்குபட்ட வேடங்கிநல்லூர் கிராமத்தில் உள்ளதால், திருவள்ளூர் நகர எல்லையினை சிறுவானூர் கிராமத்தில் பஸ் நிலையம் அமையும் இடம் வரை விரிவாக்கம் செய்ய இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிகளுக்கு மொத்தம் ரூ.26.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்