ராமநாதபுரம்
ரூ.100 கோடி பயிர்க்கடன் வழங்க நிதி ஒதுக்கீடு
|திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ரூ.100 கோடி பயிர்க்கடன் வழங்க நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது என்று கருமாணிக்கம் எம்.எல்.ஏ. கூறினார்.
தொண்டி,
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ரூ.100 கோடி பயிர்க்கடன் வழங்க நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது என்று கருமாணிக்கம் எம்.எல்.ஏ. கூறினார்.
பொதுமக்களிடம் குறை கேட்டார்
தொண்டி பேரூராட்சியில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களிடம் கருமாணிக்கம் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர் தொண்டி பேரூராட்சியில் மழைநீர் சூழ்ந்து கொண்ட வட்ட கேணி பகுதியை நேரில் பார்வையிட்டு எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது உடனடியாக தண்ணீரை அப்புறப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.100 கோடி பயிர்க்கடன்
திருவாடானை தொகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரம் தட்டுப்பாடு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கலெக்டர் மற்றும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் யூரியா உரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு சுமார் ரூ.300 கோடி விவசாய கடன் வழங்க உள்ளதாகவும். திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு மட்டும் ரூ.100 கோடி பயிர் கடன் வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது வரை இத்தாலுகாக்களில் ரூ.24 கோடி விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பகுதி நேர நியாய விலை கடை
மக்களின் கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக நகரும் நியாய விலை கடைகள் அமைக்கப்படும். அதனை தொடர்ந்து பகுதி நேர கடைகளாக மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருவாடானை தொகுதியில் உள்ள எட்டுகுடி, சிறுகம்பையூர், அஞ்சுகோட்டை, திருத்தேர்வளை ஆகிய நான்கு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படாமல் இருந்து வருகிறது. இந்த கூட்டுறவு சங்கங்களில் புதிய பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.