< Back
மாநில செய்திகள்
வேங்கைவயலில் குடிநீர் தொட்டி கட்ட ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

வேங்கைவயலில் குடிநீர் தொட்டி கட்ட ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு

தினத்தந்தி
|
22 Jan 2023 12:00 AM IST

வேங்கைவயலில் புதிதாக குடிநீர் தொட்டி கட்ட ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அசுத்தம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செயலில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் அசுத்தம் செய்யப்பட்ட குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருவதால் அந்த குடிநீர் தொட்டியை தற்போது இடிக்க இயலாது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வேங்கைவயலில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு எம்.பி. நிதியில் இருந்து ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கி புதுக்கோட்டையை சேர்ந்த அப்துல்லா எம்.பி., மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி அருகே புதிதாக மற்றொரு குடிநீர் தொட்டி கட்டப்படுகிறது. இந்த குடிநீர் தொட்டிக்கு எம்.பி.யின் நிதி பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ரூ.7 லட்சம் குடிநீர் தொட்டி கட்டவும், ரூ.2 லட்சம் குழாய்கள் இணைப்பு பதிப்புக்கும் பயன்படுத்தப்படுவதாக கூறினர்.

மேலும் செய்திகள்