கன்னியாகுமரி
ஜெருசலேம் புனித பயணத்திற்கு கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி ஒதுக்கீடுஅமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
|ஜெருசலேம் புனித பயணத்திற்கு கடந்த ஆண்டை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
நாகர்கோவில்,
ஜெருசலேம் புனித பயணத்திற்கு கடந்த ஆண்டை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
மருத்துவ முகாம்
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, குமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நேற்று நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகியோர் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்து 63 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 36 ஆயிரத்து 353 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
மோட்டார் பொருத்திய தையல் எந்திரம்
விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில் கூறியதாவது:-
சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. உலமாக்கள் இறந்து விட்டால் அவரது குடும்பத்தாருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 10 ஆயிரம் உலமாக்கள் பதிவு செய்துள்ளனர்.
அவர்களுக்கு முதல் கட்டமாக விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதற்காக மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் இந்த ஆண்டு 2,500 வழங்கப்படுகிறது.
தேசிய அடையாள அட்டை
குமரி மாவட்டத்தில் 22,857 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடடை 21,822 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. பராமரிப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 6,917 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 கோடியே 68 லட்சம் பராமரிப்பு உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தேவாலயங்கள் கட்டுவதற்கு சில பிரச்சினை உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதை முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெருசலேம் புனித பயணத்திற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹஜ்பயணம் மேற்கொள்ள மானியம் வழங்கப்பட்டு வருகிறது. சிறுபான்மை நலன் சார்ந்த அரசாக தி.மு.க அரசு விளங்கி வருகிறது. வெளிநாடு செல்பவர்கள் மாவட்ட கலெக்டரிடம் பதிவு செய்து விட்டு சென்றால் அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத நிலையில் உருவாக்க முடியும்.
வெளிநாடுகளில் பணியாற்றுபவர்களுக்காக நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடு சென்று பணி காலத்தில் இறந்துவிட்டால் அவர்களது குடும்பத்திற்கு பாதுகாப்பு நிதி வழங்குவதற்கு திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிட உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க. உறுதுணையாக இருக்கும்
விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:-
"தமிழகத்தில் 6.8 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தமிழகத்தில் இந்த ஆண்டுக்கு ரூ.1,443 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவி தொகையை உயர்த்தி வழங்கியது தி.மு.க. அரசு தான். மாற்றுத்திறனாளிகளுக்கு எப்போதும் தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும்.
குமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 300 பேர் சாலை விபத்துகளில் பலியாகி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 160 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிகளில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம், எம்.எல்.ஏ.க்கள் பிாின்ஸ், ராஜேஷ் குமார், மாவட்ட சிறுபான்மையினர் அதிகாரி சுப்பையா, கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் உள்பட அரசு அதிகாரிகள், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.