< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்; அணுசக்தி துறை செயலாளரிடம் சபாநாயகர் அப்பாவு மனு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்; அணுசக்தி துறை செயலாளரிடம் சபாநாயகர் அப்பாவு மனு

தினத்தந்தி
|
26 Jun 2023 1:56 AM IST

கூடங்குளம் அணுமின் நிலையம் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அணுசக்தி துறை செயலாளரிடம் சபாநாயகர் அப்பாவு மனு வழங்கினார்.

அணுசக்தி துறை செயலாளருடன் சந்திப்பு

மும்பையில் இந்திய அணுசக்தி துறை செயலாளர் அஜித்குமார் மொகந்தியை தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.

அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 1999-ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியபோது 18-2-1999 அன்று நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமையில், அணுமின் திட்ட மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் அதன்ட்ரா சென், அப்போதைய ராதாபுரம் எம்.எல்.ஏ.வான நான் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 'சி' பணியிடங்களில் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்திற்கு நிலம் வழங்கியவர்கள், இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு பணிவாய்ப்பு வழங்கிட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு தரப்பட்டு வந்தது. அதற்கு பிறகு நிலம் வழங்கியவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் வேலைவாய்ப்பு தரப்படவில்லை. எனவே கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நிலம் வழங்கியவர்கள், இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும்.

கூடங்குளம் அணுமின் திட்ட பணிகள் நடைபெறும் பகுதியில் அமைந்துள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, தோமையார்புரம், கூத்தன்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, மிக்கேல்நகர், ஜார்ஜ்நகர் ஆகிய கடற்கரை கிராமங்களுக்கு மீனவர்களின் தொழில்களுக்கு மிக முக்கியமாக தேவைப்படும் தூண்டில் வளைவு அமைக்கும் திட்டப்பணிகளுக்கு ரூ.700 கோடி சிறப்பு நிதியாக வழங்கி செயல்படுத்தி தர வேண்டும்.

ஏழைகள் வீடு கட்ட...

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் நிலம் இருந்தும் வீடு கட்ட வசதி இல்லாத 10 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சத்தில் வீடு கட்டுவதற்கு ரூ.500 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி செயல்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மனுவை பெற்று கொண்ட இந்திய அணுசக்தி துறை செயலாளர் அஜித்குமார் மொகந்தி கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். மராட்டிய மாநில தி.மு.க. செயலாளர் மும்பை மீரான், இந்திய அணுசக்தி கழக தலைவர் புவன் சந்திரபதக், அணுசக்தித்துறை தொழில்நுட்ப இயக்குனர் சஞ்சய்குமார், அணுசக்தி துறை துணை செயலாளர் பிஷ்வதிப்டே ஆகியோர் உடன் இருந்தனர்.

பஸ்நிலைய பணிகள்

வள்ளியூர் பஸ்நிலையம் இடித்து அகற்றப்பட்டு, ரூ.12 கோடியே 13 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட உள்ளது. பஸ்நிலையம் இடித்து அகற்றப்பட்டதை தொடர்ந்து, அதன் எதிரில் சாலையோரம் நின்று பயணிகள் பஸ் ஏறி செல்கின்றனர்.

இந்தநிலையில் வள்ளியூர் பஸ்நிலையத்தை சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகளிடம் பேசிய அவர், பஸ்நிலைய கட்டுமான பணிகளை விரைந்து தொடங்கி நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து வள்ளியூர் தினசரி சந்தையில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை சபாநாயகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் வள்ளியூர் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து அதிகாரிகள், வார்டு உறுப்பினர்களுடன் சபாநாயகர் அப்பாவு ஆலோசனை நடத்தினார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திருச்செல்வம், நெல்லை உதவி நிர்வாக செயற்பொறியாளர் கென்னடி, நிர்வாக பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர்கள் பாக்கியராஜ், ராஜேஷ், பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கண்ணன், செயல் அலுவலர் தெய்வீகன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் நம்பி, இந்திய கம்யூனிஸ்டு ராதாபுரம் வட்டார செயலாளர் சேதுராமலிங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்