< Back
மாநில செய்திகள்
கூட்டாளிகள் சிக்கிய நிலையில் வழிப்பறி திருடர்கள் 2 பேர் கைது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கூட்டாளிகள் சிக்கிய நிலையில் வழிப்பறி திருடர்கள் 2 பேர் கைது

தினத்தந்தி
|
29 Jun 2023 12:15 AM IST

கோவில்பட்டியில் பெண்களிடம் நகைகளை வழிப்பறி செய்த வழக்கில் கூட்டாளிகள் சிக்கியிருந்த நிலையில், வழிப்பறி திருடர்கள் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16½ பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் பெண்களிடம் நகைகளை வழிப்பறி செய்த வழக்கில் கூட்டாளிகள் சிக்கியிருந்த நிலையில், வழிப்பறி திருடர்கள் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16½ பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

பெண்களிடம் நகை வழிப்பறி

கோவில்பட்டி பங்களாத் தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி பூமாரி என்ற முத்துமாரி (வயது 57). இவர் கடந்த மாதம் 15-ந்தேதி இரவு தனது வீட்டின் முன்பு நாற்காலியில் அமர்ந்திருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் முத்துமாரி கழுத்தில் அணிந்திருந்த 12¼ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அதேநாளில் ஏ.கே.எஸ். தியேட்டர் ரோட்டில் நடந்து சென்ற கதிரேசன் கோவில் ரோட்டைச் சேர்ந்த கோபால்சாமி மனைவி வெள்ளத்தாய் (44) என்பவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

இதுகுறித்து அந்த 2 பெண்கள் அளித்த புகாரின் பேரில், கிழக்கு மற்றும் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஏற்கனவே, நகை வழிப்பறி திருடர்களுக்கு உடந்தையாக இருந்ததாக திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பச்சயங்கோட்டை காந்தி நகரை சேர்ந்த சனாபுல்லா ( 42), அவரது மனைவி ரசியா ( 38), மகன் ஜாபர் ( 19) ஆகிய 3 பேரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களது கூட்டாளிகளான நகை வழிப்பறி திருடர்களை போலீசார் தேடிவந்தனர்.

திருடர்கள் சிக்கினர்

இந்நிலையில், நகை பறிப்பில் ஈடுபட்ட சனாபுல்லாவின் உறவினர்களான தென்காசி மக்கா நகரைச் சேர்ந்த பிரூஷா மகன் முகமதுநவாஸ் (29), திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரை சேர்ந்த பழனிபாபா மகன் முகமது அலி (21) ஆகியோரை நேற்று கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாதவராஜ், நாராயணசாமி மற்றும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 16½ பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

மேலும் செய்திகள்