நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? - பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு ஆலோசனை
|கூட்டணி விஷயத்தில் பா.ம.க.வில் இழுபறி நீடித்து வருகிறது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க. தனது கூட்டணியை அறிவித்து, தொகுதி பங்கீட்டையும் நிறைவு செய்துள்ளது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறது.
ஆனாலும் பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டப்படவே இல்லை. குறிப்பாக பா.ம.க., வட மாவட்டங்களை குறிவைத்து 10 தொகுதிகள் வரையிலும், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியையும் கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை அதிகபட்சமாக 7 இடங்கள் வரை பா.ம.க.வுக்கு ஒதுக்க தயாராக இருப்பதாக தெரிகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. உயர்மட்ட தலைமை நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆலோசனை கூட்டத்தின் இறுதியிலேயே யாருடன் கூட்டணி வைக்க பா.ம.க.வினர் விருப்பம் தெரிவித்தனர், அல்லது வேறு ஏதும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவரும்.