நடிகர் விஜய்யுடன் கூட்டணியா? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
|நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் அ.தி.மு.க. கூட்டணியா? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.
சென்னை,
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு மெத்தமனமாக நடந்து கொண்டதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனிடையே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதவில்,"கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை. நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார். மீதமுள்ளவர்கள் யாரைக் கண்டு அஞ்சுகின்றனர்?" என்று பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், "நல்லது செய்தால் யாரை வேண்டுமானாலும் பாராட்டலாம். மற்ற நடிகர்கள் நல்லது செய்தாலும் நான் பாராட்டவே செய்கிறேன். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் வேறு யாரும் குரல் கொடுக்கவில்லை என்றுதான் நான் சொன்னேன்.
தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கூட்டணி குறித்து கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் கூட்டணிக்காக ஏங்க வேண்டிய அவசியம் கிடையாது. நடிகர் அமீர், நடிகர் பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக இதுவரை எதுவும் பேசவில்லை" என்று தெரிவித்தார்.