ஈரோடு
குடிநீர் திட்டப்பணிகள் சரியாக நடக்கவில்லை எனக்கூறிதி.மு.க- காங்கிரஸ் கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்;கோபி நகராட்சியில் பரபரப்பு
|கோபி நகராட்சி பகுதியில் குடிநீர் திட்டப்பணிகள் சரியாக நடக்கவில்லை எனக்கூறி தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடத்தூர்
கோபி நகராட்சி பகுதியில் குடிநீர் திட்டப்பணிகள் சரியாக நடக்கவில்லை எனக்கூறி தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி கூட்டம்
கோபி நகராட்சி கூட்டம் நகராட்சியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
குமார சீனிவாசன் (தி.மு.க.):- நகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் குடிநீர் சரியான முறையில் வினியோகிக்கப்படவில்லை. கடந்த ஆட்சி காலத்தில் திட்டப்பணிகள் முடிவடையும் முன்பே தேர்தலை கருத்தில் கொண்டு கோபி நகரில் பெரும்பாலான இடங்களில் தார் சாலைகள் போடப்பட்டன. குடிநீர் திட்டப்பணிகள் இன்னும் முடியாததால் மீண்டும் தார் ரோடுகள் தோண்டப்பட்டு சேதம் அடைந்து வருகிறது. இதனால் நகராட்சிக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தர்ணா போராட்டம்
இதை வலியுறுத்தி குமார சீனிவாசன், நகராட்சி துணைத்தலைவர் தீபா (காங்கிரஸ்), ஹெலன் ஜெர்ரி (தி.மு.க.), சவுரியம்மாள் (தி.மு.க.) ஆகியோர் கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்.ஆர்.நாகராஜ் (தலைவர்):- தார் ரோடு போடப்பட்டதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களே தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல. எனவே நீங்கள் வெளியே செல்லுங்கள்.
குமார சீனிவாசன் (தி.மு.க.):- வெளியே போங்கள் என்று நீங்கள் எப்படி சொல்லலாம்.
அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குறுக்கிட்டு புதுச்சாமி கோவில் வீதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் சரியான முறையில் கட்டப்படவில்லை என்றனர்.
என்.ஆர்.நாகராஜ் (தலைவர்):- கட்டிடம் கட்டுவதில் தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.
கூட்டத்தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சி கூட்டம் முடியும் வரை கவுன்சிலர்களின் தர்ணா போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் கோபி நகராட்சி கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.