< Back
மாநில செய்திகள்
அன்னவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
10 Sept 2022 11:37 PM IST

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார்.

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும், சுற்றுவட்டார பகுதியில் அதிகளவில் கிராமங்கள் உள்ளதால், கிராம பகுதியில் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள், பல்வேறு நோய்களுக்கும், அவசர சிகிச்சைக்கும் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் மணிக்கணக்கில் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அவசர சிகிச்சைக்கு வந்தால் முதலுதவி சிகிச்சை அளிக்கக்கூட போதிய டாக்டர்கள் இல்லாததால் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

சாலை விபத்துகள், விஷக்கடி உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற வேண்டியவர்கள் தற்போது டாக்டர்கள் பற்றாக்குறையால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் அங்கு செல்வதற்குள் உயிர் பிரியும் நிலைமையும் ஏற்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவசர சிகிச்சைக்கு சென்ற நோயாளிகளை பணியில் இருந்த டாக்டர் ஒருவர் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அன்னவாசல் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதையடுத்து, நேற்று அன்னவாசல் அரசு மருத்துவ மனையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. திடீரென ஆய்வு செய்தார். பின்னர் பணியில் இருந்த டாக்டர் மற்றும் நர்சிடம் மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதேபோல் அங்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளிடமும் குறைகளை கேட்டு அறிந்தார்.

மேலும் செய்திகள்