அரசியல் கட்சி தொடங்க கனவு.. நடிகர் விஜய்யை தட்டிக்கொடுப்போம்: சீமான் கருத்து
|அரசியலுக்கு வந்த உடன் வெற்றி பெறுவது எளிதல்ல என்றும், கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெற்றால் அது பெரும்புரட்சிதான் என்றும் சீமான் தெரிவித்தார்.
சென்னை,
லியோ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் என்ன பேசுவார் என அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
அனைவரும் எதிர்பார்த்ததுபோல், நடிகர் விஜய்யும் குட்டிக்கதை, சில விமர்சனங்கள், அரசியல், சில சூசக பதில்கள் கொடுத்து அரங்கத்தை அதிர வைத்தார். பின்னர், தளபதி என்றால் என்ன அர்த்தம்; மக்கள் தான் மன்னர்கள்; நான் உங்கள் கீழ் இருக்கும் தளபதி; நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் என தனது அரசியல் பயணத்தை சூசகமாக கூறினார்.
அப்போது தொகுப்பாளர், 2026 என சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் வருடத்தை குறிப்பிட்டு கேள்வியெழுப்புகையில், சில மழுப்பலான பதிலளித்த விஜய், இறுதியில் 'கப்பு முக்கியம் பிகிலு' எனக்கூறினார்.
நான் அரசியலுக்கு வருகிறேன் என்று நடிகர் விஜய் இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை என்றாலும், தற்போது சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜயின் பேச்சு தான் வைரலாகி வருகிறது. அவரது அரசியல் பயணம் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் குறித்த பேச்சுக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவிக்கையில், "அரசியல் கட்சி தொடங்க நடிகர் விஜய்-க்கு கனவு இருப்பதென்றால் அவரை வாழ்த்த வேண்டும். ஒருவர் முதுகுக்கு பின்னால் நாம் செய்யவேண்டியது தட்டிக்கொடுப்பது மட்டுமே. தம்பியை தட்டிக்கொடுப்போம்.
விபத்து விதியாகிவிடாது, எம்ஜிஆரை போன்று அரசியலுக்கு வந்த உடன் வெற்றி பெறுவது எளிதல்ல. கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெற்றால் அது பெரும்புரட்சிதான். நாங்கள் யாரோடும் கூட்டணி இல்லை. எங்களோடு யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம்" என்றார்.