"எல்லா போர்களும் வெற்றிகளுக்கு அல்ல" - தோல்விக்கு பின் ராதிகா சரத்குமார்
|விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். இவர் 1,64,149 வாக்குகள் பெற்றுள்ளார். அதேதொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,82,876 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் 3,78,243 வாக்குகள் பெற்று பின்னிலையில் உள்ளார்.
மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) - 3,82,876
விஜய பிரபாகர் (தேமுதிக) - 3,78,243
ராதிகா சரத்குமார் (பாஜக) - 1,64,149
இந்நிலையில், தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து ராதிகா சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 'எல்லா போர்களும் வெற்றிக்காக நடத்தப்பட்டவை அல்ல. அவற்றில் சில போர்களில் யாரோ ஒருவர் போரிட்டார்கள் என்று சொல்வதற்காகவே போரிடப்படுகின்றன'. இவ்வாறு தெரிவித்துள்ளார்.