கள்ளக்குறிச்சி
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்
|தியாகதுருகம் அருகே அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் வேளாண் கூடுதல் இயக்குனர் ஆய்வு
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே உள்ள பிரிதிவிமங்கலம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து சென்னை வேளாண் கூடுதல் இயக்குனர்(விதைகள்) முருகன் ஆய்வு மேற்கொண்டார். இதில் கிராமத்தில் பரவலாக உள்ள 3.95 ஹெக்டர் தரிசு நிலங்களை ஆய்வு மேற்கொண்ட அவர் இந்த தரிசு நிலங்களை தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயிர்சாகுபடிக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அதே பகுதியில் நீர்வள ஆதாரத்துறை சார்பில் பெரிய ஏரியில் கரைகள் பலப்படுத்தும் பணியை ஆய்வு செய்த முருகன் ஏரி கரையில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க அதிகாரியிடம் அறிவுறுத்தினார்.
முன்னதாக தியாகதுருகம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடர்பாக இதர துறைகளை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு தேவையான மேம்பாடு, கட்டமைப்பு வசதிகளை கிராம அளவில் செயல்படுத்துமாறு அறிவுரை வழங்கினார். இதில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, துணை இயக்குநர் சுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) விஜயராகவன், வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு, உதவி விதை அலுவலர் மொட்டையாபிள்ளை, உதவி வேளாண்மை அலுவலர் துரைராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.