< Back
மாநில செய்திகள்
நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல்காந்தி ஆகிவிட முடியாது -ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
மாநில செய்திகள்

நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல்காந்தி ஆகிவிட முடியாது -ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

தினத்தந்தி
|
22 July 2023 3:14 AM IST

நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல்காந்தி ஆகிவிட முடியாது என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 22-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாநில துணைத்தலைவர் கோபண்ணா, பொதுச்செயலாளர்கள் ரங்கபாஷ்யம், எஸ்.ஏ.வாசு, மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன், கலைப்பிரிவு தலைவர் சந்திரசேகர், செயலாளர் சூளை ராஜேந்திரன், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் வெளியே பேசியது மிகப்பெரிய தவறு. ஜனநாயக படுகொலை. மணிப்பூர் கலவரம் நடந்து பல நாட்கள் ஆகியும் எதும் தெரியாது போல பிரதமர் மோடி பேசுகிறார்.

அமலாக்கத்துறையை ஏவி இன்று நடவடிக்கை எடுக்கின்றனர். இதேநிலை மோடிக்கும் வரும். மோடி மீது பல கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. அமலாக்கத்துறை மோடியின் கைப்பாவையாக இருக்கிறது. இதே அமலாக்கத்துறை மோடி மீதும் ஒரு நாள் பாயும்.

ராகுல்காந்தி ஆகிவிட முடியாது

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஒரு நடிகர். அவர் நடைபயணம் போவதாக சொல்கிறார். நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல்காந்தி ஆகிவிட முடியாது. ராகுல்காந்தி கால்நடையாய் சென்று நாடு முழுவதும் மக்களை சந்தித்தார். ஆனால், அண்ணாமலை கார் பயணம் செல்ல உள்ளாராம். அந்த பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

தமிழகத்தில் என்றுமே பா.ஜ.க.வுக்கு இடமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ராம்குமார் அஞ்சலி

நடிகர் சிவாஜிகணேசன் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது மூத்த மகனும், திரைப்பட தயாரிப்பாளருமான ராம்குமார், சிவாஜி கணேசன் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் செய்திகள்