< Back
மாநில செய்திகள்
தொகுதி மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் - வாக்களித்த பின் அன்னியூர் சிவா பேட்டி
மாநில செய்திகள்

தொகுதி மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் - வாக்களித்த பின் அன்னியூர் சிவா பேட்டி

தினத்தந்தி
|
10 July 2024 9:40 AM IST

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. போட்டியில் இருந்து விலகி கொண்டதால், தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா அவரது குடும்பத்தினருடன் அன்னியூர் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர் என்ற முறையில் நான் வாக்களித்துள்ளேன். விக்கிரவாண்டி தொகுதி மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். முதல்-அமைச்சரின் சாதனைகளின் அடிப்படையில் நான் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்