வேலூர்
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்
|மேகதாதுவில் அணை கட்ட முயன்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
கோரிக்கை மாநாடு
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட கோரிக்கை மாநாடு நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் லதா தலைமை தாங்கினார்.
இதில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் மணி, பிரேம்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தடுப்பணைகள்
மேல்அரசம்பட்டு பத்திரப்பள்ளி அணைகளை விரைந்து கட்ட வேண்டும். பாலாற்றில் நீராதாரத்தை பெருக்க தடுப்பணைகளை அமைக்க வேண்டும். வேலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.
புதிய சிப்காட் தொழிற்பேட்டையை வேலூர் மாவட்டத்தில் அமைக்க வேண்டும். பாலாற்றிலும், ஏரியிலும் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் வீட்டுமனைப்பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்
தமிழகத்தில் ஒரு கவர்னர் இருக்கிறார். கவர்னர் பணியை தவிர மற்ற பணியை அவர் செய்கிறார். மாற்றி மாற்றி பேசுகிறார். எனவே அவரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். கர்நாடக அரசு காவிரி நதிநீர் ஆணையம் அறிவித்துள்ளபடி தமிழகத்திற்கு உரிய நீர் பங்கீட்டினை உடனடியாக வழங்க வேண்டும்.
கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் துணை முதல்-மந்திரி சிவகுமார் தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். மேகதாதுவில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் அணையை கட்ட முடியாது. தற்போது அவர்கள் அணையை கட்ட முயற்சிப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் எட்ப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபடுவோம்
அணை கட்ட முயற்சிகள் செய்தால் தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க., தி.மு.க., உள்பட அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். மத்திய அரசு கூட்டுறவு சங்க மசோதாவை கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலாகும். இவ்வாறு செய்ய கூடாது.
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இங்கு பொதுசிவில் சட்டத்தை அராஜகமாக கொண்டு வர முயற்சிக்கிறார்கள். மத்திய அரசு எல்லாகட்சிகளுடன் பேசி முடிவெடுக்க வேண்டும். மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடக்கிறது. அமைதி திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.