< Back
மாநில செய்திகள்
இருக்கன்குடி கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ெசய்து தரப்படும்
விருதுநகர்
மாநில செய்திகள்

இருக்கன்குடி கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ெசய்து தரப்படும்

தினத்தந்தி
|
30 Oct 2022 7:09 PM GMT

இன்னும் 3 ஆண்டுகளில் இருக்கன்குடி கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சாத்தூர்,

இன்னும் 3 ஆண்டுகளில் இருக்கன்குடி கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

2021-22-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலைத்துறை மானிய கோரிக்கையின் போது கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு முழுமையான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த 40 முதுநிலை கோவில்களுக்கான ஒருங்கிணைந்த பெருந்திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

அறநிலையத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் சுந்தரமோகன், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

25 லட்சம் பக்தர்கள்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு 25 லட்சம் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்ற இது போன்ற கோவில்களை ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் கீழ் மேம்பாடு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

அந்த வகையில் திருச்செந்தூர் கோவிலுக்கு இணையாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார். அதேபோல் ஸ்ரீரங்கம், திருத்தணி, சமயபுரம் மாரியம்மன் கோவில், வயலூர் முருகன், பழனி தண்டாயுதபாணி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட பல கோவில்களிலும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

3 ஆண்டுகள்

இதேபோல் இருக்கன்குடியில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக 40 குளிர்சாதன அறைகள், 40 குளிர்சாதனமற்ற அறைகள், 98 விருந்து மண்டபங்கள், ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக்கடன் செலுத்த வருகின்றவர்களுக்கு சுகாதார முறையில் வசதிகள், ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் பொங்கல் இடும் வகையில் பொங்கல் மண்டபம், வியாபாரிகளுக்கு குறைந்த வாடகையில் 320 கடைகள் உள்பட பல்வேறு வசதிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் அனைத்து வசதிகளும் கூடிய கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலை இன்னும் 3 ஆண்டுகளுக்குள் நிச்சயம் மாற்றிவிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை, ஊராட்சி ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்