< Back
மாநில செய்திகள்
பல்வேறு அரசு துறைகளில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் - ராமதாஸ்
மாநில செய்திகள்

பல்வேறு அரசு துறைகளில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் - ராமதாஸ்

தினத்தந்தி
|
29 Oct 2022 4:03 PM IST

ஐகோர்ட்டு தீர்ப்பு படி 10 ஆண்டுகள் பணியாற்றிய அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 6 பேரை பணி நிலைப்பு செய்ய சென்னை ஐகோர்ட்டு ஆணையிட்டு இருக்கிறது. தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய தமிழக அரசு மறுத்த நிலையில், அதை நிராகரித்து அவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு சமூக நீதி வழங்கி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

சென்னை ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பு எந்த அடிப்படையில் வழங்கப்பட்டதோ, அதே அடிப்படையில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும்.

தமிழக அரசு, அரசாணை எண் 131-ல் உள்ள நிபந்தனைகளை தளர்த்தி, சென்னை ஐகோர்ட்டு காட்டிய கருணையுடன், 10 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும், அவர்கள் எந்த தேதியில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தார்களோ, அந்த நாளில் இருந்து அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் தற்காலிக நியமனங்களை தவிர்த்து, அனைத்து பணியிடங்களுக்கும் நிரந்தர பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்