தஞ்சாவூர்
அனைத்து தார் சாலை பணிகளும் ஒரு ஆண்டுக்குள் நிறைவு - மேயர் சண்.ராமநாதன்
|அனைத்து தார் சாலை பணிகளும் ஒரு ஆண்டுக்குள் நிறைவடையும்
தஞ்சை மாநகராட்சியில் அனைத்து தார்சாலை பணிகளும் ஒரு ஆண்டுக்குள் நிறைவடையும். தற்போது ரூ.40 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.
தஞ்சை மாநகராட்சி
தஞ்சை மாநகராட்சி பகுதியில் பல்வேறு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தார்சாலை சீரமைப்பு, புதிதாக சாலை அமைத்தது, மண்சாலைகளை தார்சாலைகளாக மாற்றுதல், பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் 2023-24-ம் ஆண்டு மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் 4.430 கி.மீ. நீளத்துக்கு மண்சாலைகள் தார்சாலைகளாக மாறற்றப்படுகின்றன. ரூ.3 கோடியே 19 லட்சம் செலவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த சாலை பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பூமி பூஜை தஞ்சை நடராஜபுரம் 3-வது தெருவில் நேற்று நடைபெற்றது.
மேயர் தொடங்கி வைத்தார்
அதன்படி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு, சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி பொறியாளர் ரமேஷ், திலீப் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதன்படி நடராஜபுரம் 3-வது தெருவில் மட்டும் 1.420 கி.மீ. தூரம் ரூ.1 கோடியே 3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொக்லின் எந்திரம் மூலம் சாலையை தோண்டும் பணி நடைபெற்றது.
பின்னர் மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.40 கோடி மதிப்பில் இந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக சாலைகள் இருந்ததை கருத்தில் கொண்டு இதனை சீரமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரிடம் எடுத்துக்கூறி நிதி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சாலை பணிகளுக்கு நிதி கோரப்பட்டு உள்ளது.
மண்சாலைகள் தார்சாலையாக மாற்றம்
அந்த நிதியும் பெறப்பட்டவுடன் அனைத்து சாலைகளும் தார்சாலைகளாக மாற்றப்படும். இந்த பணிகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்குள் நிறைவடையும். மேலும் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாட்டு பணிகள் தமிழ்நகர் 3-ம் தெரு, தேவாநகர், அர்ஜூன் நகர், அனில்நகர் உள்ளிட்ட 14 இடங்களில் மண்சாலைகள், தார்சாலைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல இடங்களில் தெருக்கள் அமைக்கப்பட்டது முதல் தார்சாலை போடாமல் மண்சாலையாக உள்ள சாலைகள் தார்சாலைகளாக மாற்றப்படுகின்றன. இந்த பணிகள் அனைத்தும் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.