< Back
மாநில செய்திகள்
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
22 July 2024 5:11 AM IST

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு, பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இருந்ததுபோல் இந்த ஆண்டும் பட்ஜெட் சிறப்பாக இருக்கும். இனி வருகிற 10 ஆண்டுகளில், இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக இருக்கும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த அடிப்படையில் மத்திய பட்ஜெட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க. அரசு, மின்சார கட்டணத்தை, அடிக்கடி உயர்த்தி அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகப்பெரிய சுமையை தந்திருக்கிறது. காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் போராடி பெற்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துகின்ற பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் இருப்பதால், தன் செல்வாக்கை வைத்து கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீரை பெற்றுத்தர முனைப்பாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அரசியல் கட்சியும், தேர்தலுக்கு முன்பு நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று கூறுவது வாடிக்கையானது. ஆனால் இறுதி தீர்ப்பு மக்கள் கையில்தான் உள்ளது. அம்மா உணவகம் மட்டுமல்லாமல், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கோபங்கள் மக்கள் மனதில் இருக்கிறது. அது வரக்கூடிய தேர்தலில் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்