தமிழகம் முழுவதும் மக்களுக்கு பாதிப்பின்றி பஸ்கள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர்
|அரசியல் காரணங்களுக்காக போராட்டங்கள் நடத்தி மக்களை திசை திருப்பப் பார்க்கின்றனர் என்று அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டினார்.
சென்னை,
சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பொதுமக்கள் அரசு பஸ்களில், இடையூறின்றி பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பஸ்கள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. போராடுவது உங்கள் (போக்குவரத்து தொழிலாளர்கள்) உரிமை. ஆனால் மக்களுக்கு இடையூறு இன்றி போராட வேண்டும். பொங்கல் பண்டிகை நேரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் மக்களுக்கு பாதிப்பின்றி பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 95 சதவீதத்திற்கும் மேல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தடுத்து நிறுத்தப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். 96 மாதங்களாக நிலுவைத்தொகை வழங்கவில்லை எனில் அது அதிமுக ஆட்சியில்தான் நடந்தது. அகவிலைப்படி தொகையை எடுத்து அதிமுக ஆட்சியில் வேறு செலவுகளை செய்துவிட்டனர். அரசியல் காரணங்களுக்காக போராட்டங்கள் நடத்தி மக்களை திசை திருப்பப் பார்க்கின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாத பல கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. நிதி நிலை காரணமாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாத நிலை உள்ளது. நிதிநிலை சீரான பின் அகவிலைப்படி கோரிக்கையை நிறைவேற்றுவோம். அகவிலைப்படி உயர்வை வழங்குவதற்காக கால அவகாசம்தான் கேட்கிறோம். போக்குவரத்து தொழிலாளர்களின் 2 கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 2 கோரிக்கைகள் நடைமுறையில் உள்ளன. அனைத்து தொழிலாளர்களும் கூடுதல் சம்பள உயர்வு பெற்று மகிழ்ச்சியோடு உள்ளனர். போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு எப்போதும் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.