அரசுப் பேருந்தில் இருந்து சாலையில் கழன்று ஓடிய சக்கரம்: பெயரளவில் தான் பழுது நீக்கப்பட்டனவா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
|அரசுப் பேருந்துகளை எதுவுமே செய்யாமல் பழுது நீக்கி விட்டதாக கணக்கு காட்டுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து வடரங்கம் என்ற கிராமத்தை நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான நகரப் பேருந்தில் சக்கரம் பனங்காட்டாங்குடி என்ற இடத்தில் கழன்று சாலையில் ஓடியது. முன்புற சக்கரம் இல்லாமல் தடுமாறிய நகரப் பேருந்தை அதன் ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு நிறுத்தியதால், அதில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்ட பயணியர் தப்பினார்கள். சக்கரம் தனியாக கழன்று ஓடும் நிலையில் மிகவும் அலட்சியமாக அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகள் பழுதடைவதும், விபத்துகளில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 24-ம் தேதி திருச்சியில் திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப்பட்டார். அதற்கு முன் பிப்ரவரி 6-ம் தேதி சென்னை அமைந்தகரை பகுதியில் மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.
அரசுப் பேருந்துகள் பராமரிப்பின்றி மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இயக்கப்படுவது குறித்து கடந்த ஏப்ரல் 25-ம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 26-ம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுது பார்க்கப்பட்டதாகவும், அரசு பேருந்துகளில் இருந்து 17,459 பழுதுகள் கண்டறியப்பட்ட நிலையில் மே 4-ம் தேதி வரை 13,529 பழுதுகள் சரி செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள பழுதுகள் மே 6-ம் தேதிக்குள் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்திருந்தன. ஆனால், அதன்பின் 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடுகிறது என்றால் அரசுப் பேருந்துகள் பெயரளவில் தான் பழுது நீக்கப்பட்டனவா? என்ற வினா எழுகிறது.
அரசுப் பேருந்துகளை எதுவுமே செய்யாமல் பழுது நீக்கி விட்டதாக கணக்கு காட்டுவதும், பேருந்துக்கு வண்ணம் பூசி விட்டு புதுப்பிக்கப்பட்டு விட்டதாகவும் பொய்க்கணக்கு காட்டும் வழக்கம் தவிர்க்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அதற்காகவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.