< Back
மாநில செய்திகள்
நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்; மேலும் 3 கோவில்களில் செயல்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு
மாநில செய்திகள்

நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்; மேலும் 3 கோவில்களில் செயல்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு

தினத்தந்தி
|
1 July 2022 11:02 PM IST

மூன்று திருக்கோவில்களில் விரைவில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-

"இந்த ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் 165 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு ஒவ்வொன்றாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே ஐந்து கோவில்களில் நடைபெற்று வருகிறது.

இத்திட்டமானது தற்போது விரிவுபடுத்தப்பட்டு ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும் பத்து திருக்கோவில்களில் பக்தர்கள் அனைவருக்கும் தற்போது பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு மேலும், ஐந்து திருக்கோவில்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும். 121 திருக்கோவில்களில் பராமரிக்கப்பட்டு வரும் பசு மடங்கள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

பசுமைத் திருக்கோவில்கள் திட்டத்தின் கீழ் 5 திருக்கோவில்களின் அன்னதானக் கூடங்களில் பசுமை எரிவாயு திட்டம் ரூ.1 கோடி செலவில் செயல்படுத்தப்படும். திருக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள் வாடகை நிலுவைத் தொகையை வசூலிக்கவும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்களில் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அந்தந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்