< Back
மாநில செய்திகள்
கள்ளழகர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

கள்ளழகர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

தினத்தந்தி
|
27 Jun 2024 4:40 AM IST

கள்ளழகர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று மாலை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் முடிந்ததும், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பிலான 108 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு பேசிளார். அவற்றில் முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

* ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 17 ஆயிரம் கோவில்களின் வைப்புத் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாண்டு 1,000 நிதி வசதியற்ற கோவில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ.110 கோடி அரசு நிதியாக வழங்கப்படும். ஏற்கனவே, 17 ஆயிரம் கோவில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உதவித் தொகை ரூ.1,000, இவ்வாண்டு கூடுதலாக சேர்க்கப்படும் 1,000 கோவில்களின் அர்ச்சகர்களுக்கும் வழங்கப்படும்.

* ஒருகால பூஜை திட்ட கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் நலன் கருதி, இவ்வாண்டு 500 மாணவர்களுக்கு மேற்படிப்பிற்காக தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

* பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 11 கோவில்களில் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு இத்திட்டம் மதுரை மாவட்டம், அழகர்கோவில், கள்ளழகர் கோவில் மற்றும் கோவை மாவட்டம், மருதமலை, சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகிய 2 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

* பக்தர்களுக்கு ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 760 கோவில்களில் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு மேலும் 6 கோவில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

* திண்டுக்கல் மாவட்டம், பழனி, பழனியாண்டவர் கோவில் சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஏற்கனவே காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மதிய உணவும் வழங்கப்படும்.

* கோவில்களுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாதம் தற்போது 20 கோவில்களில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் இவ்வாண்டு மேலும் 5 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

* ஆன்மிக பயணமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விசுவநாதசுவாமி கோவிலுக்கு வயது மூப்பின் காரணமாகவும், பொருளாதார வசதியின்மை காரணமாகவும், இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 500 பக்தர்கள் கடந்த 2 ஆண்டுகளில் அழைத்து செல்லப்பட்டனர். அதிகப்படியான பக்தர்கள் இந்த பயணத்தை மேற்கொள்ள விருப்பம் தெரிவிப்பதால், இவ்வாண்டு 420 பக்தர்கள் அழைத்துச்செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.1.05 கோடி அரசு நிதியாக வழங்கப்படும்.

* தமிழ்க்கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு, வயது மூப்பின் காரணமாகவும், பொருளாதார வசதியின்மை காரணமாகவும், இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 1,000 பக்தர்களை ஆன்மிகப் பயணமாக அரசு நிதியில் அழைத்து செல்லும் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பக்தர்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, இவ்வாண்டு மேலும் 1,000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத்தொகை ரூ.1.58 கோடி அரசு நிதியாக வழங்கப்படும்.

* ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் புகழ் பெற்ற வைணவத் கோவில்களுக்கும் வயது மூப்பின் காரணமாகவும், பொருளாதார வசதியின்மை காரணமாகவும், இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட, தலா 1,000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்.

* பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கோவில்கள் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி உள்பட ரூ.50 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி கடந்த 2 ஆண்டுகளில் 1,100 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இவ்வாண்டு 700 ஜோடிகளுக்கு கோவில் சார்பில் ரூ.10 ஆயிரம் உயர்த்தி, 4 கிராம் தங்கத் தாலி உள்பட ரூ.60 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்.

* கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றியும் கோவில் மண்டபங்களில் வாடகையின்றியும் திருமணங்கள் நடத்திட அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மணமக்களுக்கு புத்தாடைகளும், 4 கிராம் தங்கத் தாலியும் கோவில் சார்பாக வழங்கப்படுகிறது. இவ்வாண்டு இத்திட்டத்தை விரிவுபடுத்தி மணமக்களுக்கு 4 கிராம் தங்கத் தாலி உள்பட ரூ.60 ஆயிரம் மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கப்படும்.

* நிதிவசதியற்ற கோவில்களில் ஏற்கனவே மிகக் குறைந்த மாத ஊதியம் பெற்று வரும் இசைக்கலைஞர்களுக்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

* 50 கோவில்களில் 100 இசைக் கலைஞர்கள் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்