வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் - சத்யபிரதா சாகு
|வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
சென்னை,
7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் நாளை எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
"நாளை நடக்கவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பொது பார்வையாளர்கள் தமிழகம் வந்தனர். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
ஒவ்வொரு சுற்றுக்கும் வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் பிரமுகர்களுக்கு தெரிவிக்கப்படும். வாக்கு எந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளின் கடைசி சுற்றுக்கு முன்பாக தபால் வாக்குகளின் எண்ணிக்கை வெளியாகும். வாக்கு எண்ணும் மையங்களில் எந்தவிதமான பிரச்னைகளும், ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்திற்குள், பத்திரிகையாளர்களுக்கு தொலைபேசி உபயோகிக்க அனுமதி கிடையாது."
இவ்வாறு அவர் கூறினார்.