< Back
மாநில செய்திகள்
குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் விடுதலை
திருச்சி
மாநில செய்திகள்

குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் விடுதலை

தினத்தந்தி
|
24 Feb 2023 2:01 AM IST

குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி திருச்சியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் அன்று இரவு சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து தில்லைநகர் சாஸ்திரி சாலை வழியாக மத்திய பஸ் நிலையம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது. பஸ்சை டிரைவர் சண்முகம் ஓட்டினார். இரவு 10 மணி அளவில் பஸ் உழவர் சந்தை அருகே வந்த போது, போராட்டம் நடைபெறுவதாக கூறி போலீசார் பட்டாபிராமன் சாலை வழியாக அந்த பஸ்சை மத்திய பஸ் நிலையம் ஓட்டிச்செல்ல அறிவுறுத்தினர். ஜெனரல் பஜார் தெரு சந்திப்பில் பஸ் வந்த போது, அங்கு வந்த போராட்டக்காரர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

இதுகுறித்து டிரைவர் சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தை சோ்ந்த தினேஷ்குமாா், இப்ராகிம், வினோத், அந்தோணி சகாயராஜ், அசாருதீன், முருகேசன், முகமது இசாத்கான், காதர் உசேன், அரிசந்திரன், புகழேந்தி, ரியாஸ், அப்பாஸ்மந்திரி, பரமேஸ்வரன், முகமதுஅஜீம், பீர்முகமது ஆகிய 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேர் மீதும் குற்றம் சரிவர நிரூபிக்கப்படாததால், 15 பேரையும் விடுதலை செய்து நீதிபதி பாபு தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்