< Back
மாநில செய்திகள்
கவுன்சிலரின் கணவர், மகன் மீது மதுபாட்டிலால் தாக்குதல்: 2 வாலிபர்கள் கைது
கரூர்
மாநில செய்திகள்

கவுன்சிலரின் கணவர், மகன் மீது மதுபாட்டிலால் தாக்குதல்: 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
14 Oct 2023 12:02 AM IST

தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட கவுன்சிலரின் கணவர், மகன் மீது மதுபாட்டிலால் தாக்குதல் நடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கவுன்சிலரின் கணவர்-மகன்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் தேவி. இவர் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 10-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

இவரது கணவர் நாகராஜன் (வயது 45). இந்த தம்பதியின் மகன் விக்னேஷ்வரன் (22). இவர்களுக்கு சொந்தமாக கரூர் தாந்தோணிமலையில் ஹார்டுவேர் கடை உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜன் மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோர் கடையில் வேலையை முடித்து விட்டு கரூரில் இருந்து பஸ் ஏறி கிருஷ்ணராயபுரத்திற்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

சரமாரி தாக்குதல்

அப்போது, பிச்சம்பட்டி பகுதியில் சாலையோரத்தில் சிலர் அமர்ந்து மது அருந்தி கொண்டு, அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை நாகராஜன், விக்னேஷ்வரன் ஆகியோர் தட்டி கேட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நாகராஜன், விக்னேஷ்வரனை மதுபாட்டிலால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், மாயனூர் ேபாலீசார் வழக்குப்பதிந்து, பிச்சம்பட்டியை சேர்ந்த கோகுல் (23), ஜீவா (19) ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக சிலரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்