புதுக்கோட்டை
மாணவர்களிடம் மது, கஞ்சா பழக்கம் அதிகரிக்கிறது-தனியார் பள்ளி நிர்வாகிகள் குற்றச்சாட்டு
|மாணவர்களிடம் மது, கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் புதுக்கோட்டை, ராமநாதபுர மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை விளக்க கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் தனியார் பள்ளிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். அதற்குரிய கல்வி கட்டண தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும். நியாயமான கல்வி கட்டணங்களை தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்க வேண்டும்.
அங்கீகாரம் பெற்ற 10 ஆண்டுகளுக்கான தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரத்தை வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை போல் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். தேசிய கல்வி கொள்கையில் எந்த குறையும் இல்லாதததால் அதனை அமல்படுத்த வேண்டும். மும்மொழி கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி இனியாமூர் தனியார் பள்ளி மாணவி தற்கொலை சம்பவத்தில் அரசு முதலில் நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் போராட்டம் நடத்திய பின்பு தான் நடவடிக்கை எடுத்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்.
மாணவர்களிடம் மது, கஞ்சா போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. மாணவர்களை கண்டிக்க, தண்டிக்க முடியவில்லை. மாணவர்களை ஒடுக்கினால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். ஒழுக்க கல்வி இல்லாமல் போய்விட்டது. எனவே மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை அரசு கட்டுப்படுத்தி தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.