விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம்; அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
|வழக்கு முடியும் வரை சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம் விற்கக் கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது மதுபானம் விநியோகிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அதே சமயம் இந்த வழக்கு முடியும் வரை சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல் திறந்த வெளிகளில் மதுபானம் விநியோகிக்க கூடாது என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடம் கூடுதல் கட்டணம் பெற்றுவிட்டு அன்பளிப்பாக மதுபானம் வழங்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மறைவான இடங்களில் மட்டுமே மதுபானம் விநியோகிக்க வேண்டும் என்றும், அந்த பகுதியை தாண்டி மற்ற இடங்களில் மதுபானம் விநியோகம் செய்யக் கூடாது என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் மறைவான பகுதிகளில் மட்டுமே மதுபானம் விநியோகம் செய்யப்படுவதை மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.