அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு; முதல் பரிசு-கார்த்திக், மேலூர் குணாவின் மாடு சிறந்த காளையாக தேர்வு
|17 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர் 2-வது இடத்திலும், 12 காளைகளை அடக்கி குன்னத்தூர் திவாகர் 3-வது இடத்திலும் உள்ளனர்.
மதுரை,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவை. இதன்படி நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.
இதனை தொடர்ந்து உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி நடைபெற்றது. போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இதன்படி, ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி ஒவ்வொரு சுற்றாக விறுவிறுப்புடன் நடந்தது. காலை 7 மணிக்கு போட்டி தொடங்கியது. மாலை 5 மணிவரை போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. எனினும், அடுத்தடுத்து சுற்றுகள் நீடித்து வந்த நிலையில், மாலை 6 மணி வரை போட்டி நடைபெறும் என பின்னர் அறிவிக்கப்பட்டது.
இதில், தொடர்ந்து ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளை அடக்க கூடிய நபர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார். இந்த போட்டியின்போது, பார்வையாளர்கள், வீரர்கள், பாதுகாவலர்கள் உள்பட 83 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில், 12 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 10 சுற்றுகளாக நடத்தி முடிக்கப்பட்டு, மாலை 6.15 மணிக்கு நிறைவு பெற்றது. இதில், 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதல் இடத்தில் உள்ளார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
17 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர் 2-வது இடத்தில் உள்ளார். 12 காளைகளை அடக்கி குன்னத்தூர் திவாகர் 3-வது இடத்தில் உள்ளார்.
இதேபோன்று, போட்டியில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு கார் பரிசு கிடைத்துள்ளது. 2-வது இடம் பிடித்த காளை மற்றும் வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.