அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெறும் - அமைச்சர் எ.வ.வேலு
|அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதான கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெறும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த வகுத்துமலை அடிவாரம் கீழக்கரையில் 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44 கோடியே 6 லட்சம் மதிப்பில், தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மைதானம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணி கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று காலை நேரில் சென்று, அந்த பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
35 சதவீத பணிகள் நிறைவு
இந்த ஜல்லிக்கட்டு மைதான திட்ட பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெறும். தொடர்ந்து 4-வது முறையாக வந்து இந்த பணிகளை ஆய்வு செய்துள்ளேன். 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது, தமிழர்களின் ஜல்லிக்கட்டு கலாசாரம். இந்த மைதானத்தில் இதுவரை 35 சதவீத பணி முடிவு பெற்றுள்ளது. தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மைதான பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
நுழைவு வாயில் வளைவு, மழைநீர் வடிகால் வசதி, செயற்கை புல்தரை அமைப்பது, குடிநீர் வசதி, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, காளைகள் நிற்கும் இடம், வீரர்கள் ஓய்வெடுக்கும் கூடம், பார்வையாளர்கள் மாடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த மைதானம் அமைந்து வருகிறது.
ரூ.22 கோடி நிதி
ஜல்லிக்கட்டு மைதானத்தை இணைக்கும் வகையில் புதிதாக சாலை, பாலம் அமைக்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். அனைத்து பணிகளும் முழுமையாக முடிவு பெற்று இந்த மைதானம் முதல்-அமைச்சர் உத்தரவிற்கு பின்னர் திறக்கப்படும்.
தமிழகத்தின் வீர விளையாட்டு, கலாசாரங்களை அடையாளபடுத்தவே இந்த மைதானம் அமைக்கப்படுகிறது. தமிழக அரசு செயல்பாடுகளை மக்கள் பாராட்டுகிறார்கள். மேலும் முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் பாரம்பரியம் மாறாமல் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்கள் வழக்கம் போல் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி, கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்துராஜா, கோட்ட பொறியாளர் சந்திரன், உதவி கோட்ட பொறியாளர் ராதா முத்துக்குமாரி, உதவி பொறியாளர் வெங்கடேஷ் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கலைஞர் நூலக திறப்பு விழா ஏற்பாடு
முன்னதாக அமைச்சர் எ.வ.வேலு, கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா நடைபெற உள்ள மதுரை ஆயுதப்படை மைதானத்தில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ரகுநாதன், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.