< Back
மாநில செய்திகள்
அழகர்கோவில் மலை சாலைப்பணிகள் 2-வது நாளாக நிறுத்தம்-வனத்துறை-அறநிலைய துறை அதிகாரிகள் வாக்குவாதம்
மதுரை
மாநில செய்திகள்

அழகர்கோவில் மலை சாலைப்பணிகள் 2-வது நாளாக நிறுத்தம்-வனத்துறை-அறநிலைய துறை அதிகாரிகள் வாக்குவாதம்

தினத்தந்தி
|
1 July 2023 10:31 PM GMT

அழகர்கோவில் மலை சாலைப்பணிகள் 2-வது நாளாக நடக்கவில்லை. இதுதொடர்பாக வனத்துறை-அறநிலைய துறை அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அழகர்கோவில்,

அழகர்கோவில் மலை சாலைப்பணிகள் 2-வது நாளாக நடக்கவில்லை. இதுதொடர்பாக வனத்துறை-அறநிலைய துறை அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பணிகள்

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்று. இக்கோவிலில் இருந்து நூபுரகங்கை மலைச்சாலை சுமார் 4 கி.மீ. தூரம் உள்ளது. இதற்காக அரசு உத்தரவுப்படி தார்ச்சாலை போடுவதற்காக பணிகள் நேற்று முன்தினம் எந்திரம் மூலம் பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் வனத்துறை அலுவலர்கள் பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர்.

அதன் பிறகு கோவில் அலுவலகத்தில் இந்த மலைச்சாலைக்கான ஆதார கோப்புகளையும், படிவங்களையும், வரைபடங்களையும், வனத்துறை அலுவலர்களிடம், அறநிலையத்துறை கோவில் அலுவலர்கள் விளக்கம் கூறி காட்டினர். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை.

வாக்குவாதம்

இந்தநிலையில் நேற்று நிறுத்தப்பட்ட பணிகளை மீண்டும் கோவில் நிர்வாகத்தினர் தொடர்ந்தனர். தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் உரிய அனுமதி பெறாமல் பணிகள் தொடங்கக்கூடாது என மீண்டும் நிறுத்தி விட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட பொறுப்பு வன அதிகாரி சரவணன் வந்தார். அப்போது வனத்துறையின் அனுமதிக்கு பிறகே சாலை பணிகளை தொடங்கலாம் என கேட்டுக் கொண்டார். அத்துடன் பணிகள் 2-வது நாளாக நிறுத்தப்பட்டது, இருப்பினும் வன அலுவலர்கள், கோவில் தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, உதவி பொறியாளர் கிருஷ்ணன், கண்காணிப்பாளர்கள் சேகர், அருள்செல்வன், பிரதீபா, பேஷ்கார் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் அங்கேயே இருந்தனர்.

பேச்சுவார்த்தை

இந்தநிலையில் மதுரை அறநிலைய துறை இணை ஆணையர் செல்லத்துரை, கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட உதவி வனஅலுவலர் ஆகியோரை நேரில் சந்தித்து சாலை பணிகள் மீண்டும் தொடங்குவது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு சில நாட்களில் சுமுகமான பேச்சுவார்த்தை ஏற்பட்டு மீண்டும் சாலை பணிகள் தொடங்கப்படும் என தெரிகிறது.

மேலும் நேற்று வழக்கம் போல் பக்தர்கள் அழகர்மலையில் உள்ள ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவில், நூபுரகங்கை ராக்காயி அம்மன் கோவிலுக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வாகனங்களில் சென்று சாமி தரிசனம் செய்து திரும்பினர்.

Related Tags :
மேலும் செய்திகள்