42 கிலோ மீட்டர் ஓடி அசத்திய 9 வயது சிறுமி - உசேன் போல்ட் போல் ஓட ஆசை..
|மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-வது நினைவு தினத்தையொட்டி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, இன்று 3-வது முறையாக கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் வீரர்கள் நேரடியாக பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஆன்-லைன் மூலம் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இப்போட்டியில் கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி அக்ஷிதா 42 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். இதனை கண்ட சக ஓட்டப்பந்தய வீரர்-வீராங்கனைகள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
ஆனால், சிறுமி அக்ஷயா 42 கிலோ மீட்டர் தூரத்தை முழுமையாக ஓடி முடித்தார். இதனை பார்த்த சக வீரர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பொதுமக்கள் என அனைவரும் சிறுமி அக்ஷிதாவை பாராட்டி வாழ்த்தினர். சிறுமி சாலையில் ஓடும் போது போலீசார் பிரத்தியேக பாதுகாப்பு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
வருங்காலத்தில் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் போன்று வேகமாக ஓடுவதே தனது விருப்பம் என்று சிறுமி அக்ஷிதா தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை பூர்விகமாக கொண்ட சிறுமி அக்ஷிதா, தனது பெற்றோர் தினகரன்-தேவகனியுடன் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் வசித்து வருகிறார். சிறுமிக்கு, பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேஷ் பயிற்சி அளித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறுமி அக்ஷிதா தினமும் காலையில் 15 கிலோ மீட்டர், மாலையில் 20 கிலோ மீட்டர் ஓடுவதாகவும், வாரத்தில் 2 நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் அவளுக்கு பிரத்தியேகமாக ஓய்வு அளிக்கப்படுவதாகவும், பிரத்தியேகமாக உணவுகள் வழங்கப்படுவதாகவும் உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேஷ் தெரிவித்தார்.