காரில் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரி... பொதுமக்கள் பீதி
|போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக போலீசார் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காரில் மண்டை ஓடுகளுடன் அகோரி ஒருவர் திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். பின்னர் அவர், காரை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ள தேரடி வீதியில் நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றார்.
கார், பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், காருக்குள் அதிகளவில் மண்டை ஓடுகள் காணப்பட்டதாலும் பொதுமக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் காரின் முன் பகுதியில் நம்பர் பிளேட்டின் முன்னால் ஒரு பிளேட் தொங்கவிடப்பட்டு அந்த பிளேட்டில் 'அகோரி நாகசாகி' என எழுதப்பட்டிருந்ததால் பொது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியது. இதனால் மாந்திரீகம் செய்யும் மந்திரவாதிகள் திருவண்ணாமலைக்கு வந்திருப்பதாக தகவல் பரவியதால் தேரடி வீதியில் மக்கள் கூடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அகோரியிடம் விசாரணை நடத்தியதில், வாரணாசியில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் கார் போக்குவரத்திற்கு இடையூறாக நின்றிருந்ததற்கு ரூ.3 ஆயிரம் அபராதம் வசூலித்து, அவரை அனுப்பினர்.