திருச்சி
அகிலனின் "எழுத்தும், வாழ்வும்" ஆவணப்படம் வெளியீடு
|அகிலனின் “எழுத்தும், வாழ்வும்” ஆவணப்படம் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் அகிலன்
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் பிறந்தவரான மூத்த தமிழ் எழுத்தாளர் அகிலன், தன் பல்சுவை படைப்புகளுக்காக பெரிதும் வாசிக்கப்பட்டவர். 19 நாவல்கள், சிறுகதைகள், சிறார் நூல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, திரைப்படம் என பலவிதமாக அகிலன் பங்களிப்பு செய்துள்ளார்.
சித்திரப்பாவை, அகிலனின் பெரிதும் பேசப்பட்ட நாவல். இதற்காக அவர் ஞானபீட விருது பெற்றுள்ளார். அகிலனின் படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், ஜெர்மனி, சீனம் உள்ளிட்ட பன்னாட்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
நூற்றாண்டு விழா நிறைவு
கடந்த ஜூன் 27-ந்தேதி அவருடைய நூற்றாண்டு விழா நிறைவு பெற்றது. இதையொட்டி எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் அகிலனின் ''எழுத்தும், வாழ்வும்'' ஆவணப்படம் வெளியீட்டு விழா திருச்சி மேல்அரண் சாலையில் உள்ள திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்க மன்றத்தில் நடைபெற்றது.
பொதிகை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குனர் எம்.எஸ்.பெருமாள் வரவேற்றார். தமிழியக்கத்தின் தென்தமிழக ஒருங்கிணைப்பாளர் மு.சிதம்பரபாரதி அகிலனின் ஆவணப்படத்தை வெளிட்டார்.
வேங்கையின் மைந்தன்
அதனை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, சோழ மன்னன் ராஜேந்திர சோழனின் கதையை வரலாற்றுப்புனைவாக வேங்கையின் மைந்தன் என்ற பெயரில் அகிலன் எழுதியுள்ளார். இந்த படைப்பு பொன்னியின்செல்வன் படைப்பை விட குறைந்தது கிடையாது. தமிழில் பலருடைய சிறுகதைகளை தொகுத்தவர்கள், அகிலனின் சிறுகதையை தொகுக்காதது ஏன் என்று தெரியவில்லை, என்றார்.
விழாவில் பொதிகை தொலைக்காட்சியின் முன்னாள் இணை இயக்குனர் வெ.நல்லதம்பி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை தலைவர் ரா.காமராசு, திருச்சி மாவட்ட தமிழியக்க பொதுச்செயலாளர் அசோகன், திருச்சி ஜமால் முகமது கல்லூரி தமிழாய்வுத்துறை உதவி பேராசிரியர் செ.சுகவேஸ்வரன் ஆகியோர் அகிலனின் நூல்கள், சிறுகதைகள் குறித்து பேசினர்.
விழாவில் திருச்சி மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி, திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்க செயலாளர் உதயகுமார் மற்றும் அகிலனின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எழுத்தாளர் அகிலனின் மகள் ஆனந்தி நன்றி கூறினார்.