சென்னை
டிபன் பாக்சில் ரூ.62 லட்சம் தங்கம் கடத்திய விமான நிலைய ஊழியர்
|சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் டிபன் பாக்சில் கடத்த முயன்ற ரூ.62 லட்சம் மதிப்புள்ள தங்க பசையை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து அதை கடத்தி வந்த ஆசாமி இலங்கைக்கு தப்பிச் சென்றார்.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் ஹவுஸ் கீப்பிங் பிரிவில் பணியாற்றும் தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள், பணி முடிந்து வெளியில் சென்று கொண்டு இருந்தனர். கேட்டில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார், அந்த ஊழியர்களை வழக்கம் போல் பரிசோதித்தனர்.
அப்போது ஒப்பந்த ஊழியர் ஒருவருடைய டிபன் பாக்சுக்குள் தங்கப் பசை இருந்ததை கண்டு பிடித்தனர். அந்த ஒப்பந்த ஊழியரை வெளியில் விடாமல் நிறுத்தி வைத்தனர். இதுபற்றி சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
சுங்க இலாகா அதிகாரிகள் வந்து ஒப்பந்த ஊழியர் டிபன் பாக்சில் இருந்த தங்க பசையை ஆய்வு செய்தபோது, அதில் 1.2 கிலோ தங்க பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.62 லட்சம் ஆகும். இது தொடர்பாக ஒப்பந்த ஊழியரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அதிகாலையில் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒரு பயணி துபாயில் இருந்து சென்னை வழியாக இலங்கை செல்வதற்கு வந்தார். அவர் இந்த தங்க பசையை துபாயில் இருந்து கடத்தி வந்துள்ளார்.
பின்னர் தங்க பசை பார்சலை அந்த ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்து விமான நிலையத்தை விட்டு வெளியில் எடுத்துச் செல்லும்படியும், அவ்வாறு வெளியில் கொண்டு வந்த பிறகு அங்கு மற்றொரு கடத்தல் ஆசாமி ஒப்பந்த ஊழியரிடம் உள்ள தங்க பசை பார்சலை வாங்கிக் கொண்டு அவருக்கு அன்பளிப்பாக பணம் கொடுக்க இருந்ததாகவும் தெரியவந்தது.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் விமான நிலைய ஒப்பந்த ஊழியரை கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.62 லட்சம் மதிப்புடைய 1.2 கிலோ தங்க பசையையும் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து தங்க பசையை கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த கடத்தல் ஆசாமி 'ட்ரான்சிட்' பயணி என்பதால் அவர் விமான நிலையத்தை விட்டு வெளியில் வராமலேயே சென்னையில் இருந்து இலங்கைக்கு மற்றொரு விமானத்தில் தப்பி சென்றுவிட்டார்.
இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற இலங்கை கடத்தல் ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.