< Back
மாநில செய்திகள்
புயல் பாதிப்பை எதிர்கொள்ள விமான நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும் - விமான நிலையங்கள் ஆணையம் உத்தரவு
மாநில செய்திகள்

புயல் பாதிப்பை எதிர்கொள்ள விமான நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும் - விமான நிலையங்கள் ஆணையம் உத்தரவு

தினத்தந்தி
|
3 Dec 2023 4:06 PM IST

புயல் கரையை கடக்கும் வரை விமான சேவைகளை நிறுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.

இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது. 'மிக்ஜம்' புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும். இன்று மாலை முதல் படிப்படியாக மழை அதிகரித்து நாளை மாலை வரை கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 'மிக்ஜம்' புயலை எதிர்கொள்வது குறித்து விமான நிலையங்கள் ஆணையத்தின் அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகள், பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் விமான நிறுவனங்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, புயல் பாதிப்பை எதிர்கொள்ள விமான நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் புயல் பாதிப்பு ஏற்பட்டால், விமானங்களை பெங்களூரு, ஐதராபாத், திருச்சி, கோவை, மதுரை போன்ற விமான நிலையங்களில் நிறுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய ஓடுபாதை பகுதியில் இருந்து மழை நீர் வெளியேறும் கால்வாயை தொடர்ந்து கண்காணித்து நீர் தேங்காதபடி வெளியேற்ற வேண்டும் எனவும், மின் தடைகள் ஏற்பட்டால் அவசரத் தேவைக்கு ஜெனரேட்டர்கள், இன்வெர்ட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயல் தாக்கம் தொடங்கியதில் இருந்து புயல் கரையை கடக்கும் வரை விமான சேவைகளை நிறுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலுக்குப் பிறகு விமான நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு விமான சேவைகள் இயக்கம் குறித்து உறுதிப்படுத்திய பின் பயணிகள் விமான நிலையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்