வான் சாகச நிகழ்ச்சி; தி.மு.க. அரசு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிவிட்டது - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
|வான் சாகச நிகழ்ச்சிக்கு தி.மு.க. அரசு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிவிட்டது என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை தி.மு.க. அரசு முறையாக ஒருங்கிணைக்கத் தவறிவிட்டது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92-வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது.
இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும்.
இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன. ஆனால் இன்று தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனங்கள்."
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.