< Back
மாநில செய்திகள்
சென்னையில் மீண்டும் தொடங்கிய விமான சேவை... 177  விமானங்கள் ரத்து...!

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சென்னையில் மீண்டும் தொடங்கிய விமான சேவை... 177 விமானங்கள் ரத்து...!

தினத்தந்தி
|
5 Dec 2023 10:12 AM IST

காலை 9 மணி முதல் சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை,

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இதனிடையே தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அபுதாபி, துபாய், கொழும்பு, டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வந்த 8 விமானங்கள், மழை மற்றும் காற்றால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. பின்னர் அந்த விமானங்கள் அனைத்தும் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.

அதேபோல, நேற்று சென்னையில் இருந்து துபாய், கொச்சி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லக்கூடிய 10 விமானங்கள் மற்றும் அந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 10 விமானங்கள் என மொத்தம் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதற்கிடையே மிக்ஜம் புயல் எதிரொலியாக விமான நிலைய ஓடுதளத்தில் 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால் விமான சேவையில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை விமான நிலையம் 2 மணி நேரம் மூடப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் விமான சேவை இன்று காலை வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது மிக்ஜம் புயல் ஆந்திர பகுதிக்குள் நுழைந்ததால் சென்னையில் மழை அளவு சற்று குறைத்துள்ளது. சென்னையில் பிரதான சாலைகளில் தேங்கி இருந்த வெள்ள நீரும் வடிய தொடங்கி உள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் சென்னை விமான நிலையம் திறக்கப்பட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

ஆனால் இயல்புநிலை திரும்பாததால் வழக்கம் போல விமான சேவைகள் இயக்கப்பட்டது எனவும், மிகவும் குறைவான அளவிலேயே விமானங்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வரவேண்டிய 88 விமானங்களும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 87 விமானங்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட விமானங்கள் குறித்த தகவல்கள் சென்னை விமான நிலைய இணையதளத்தில் வெளியிடப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்