விமானப்படை அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: போலீசார் விசாரணையை தொடர அவசியமில்லை - ஐகோர்ட்டு உத்தரவு
|முப்படைகளுக்கான பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் புகார் குழுக்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கோவையில் உள்ள விமானப்படை கல்லூரியில், பயிற்சி வகுப்புக்கு வந்த விமானப்படை பெண் அதிகாரியை, சக அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக, கடந்த 2021-ம் ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்டது. ராணுவ கோர்ட்டின் விசாரணை திருப்தி அளிக்காத நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டதை அடுத்து, கோவை மகளிர் சிறப்பு கோர்ட்டின் உத்தரவின்பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்படைக்கப்பட்டார். இதை எதிர்த்து கோவை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ராணுவ கோர்ட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில் போலீசார் விசாரணையை தொடர அவசியமில்லை எனவும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தேவையில்லை எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், விமானப்படை பெண் ஒருவர், பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக போராட தைரியம் இல்லாவிட்டால், வேறு யாருக்கு இருக்கும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, ராணுவம், கடற்படை, விமானப்படை, பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் புகார் குழுக்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.