விமானப்படை சாகச நிகழ்வு: அண்ணா சதுக்கத்திற்கு நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம்
|மெரினா கடற்கரையில் நாளை நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்வுகளை காண பொதுமக்கள் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை,
இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, நாளை மெரினா கடற்கரையில் நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்வுகளை காண பொதுமக்கள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, நாளை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்வுகளை காண வரும் பொதுமக்களின் நலன் கருதி, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக காலை 8 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகளும், அரசினர் பூங்கா மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 25 சிற்றுந்துகளும் (Small Bus) இயக்கப்பட உள்ளன.
அரசினர் பூங்கா மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து, சென்னை பல்கலைக்கழகம் வரை 3 நிமிட இடைவெளியில் சிற்றுந்துகளும், அதேபோல், டி.எம்.எஸ் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வி.எம்.தெரு வரை 2 நிமிட இடைவெளியில் மொத்தம் 25 சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த பேருந்து வசதியினை பயன்படுத்தி சிரமமின்றி பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.