எய்ம்ஸ் விவகாரம்; போராட்டக் களத்திற்கு செல்ல அ.தி.மு.க. தயங்காது - ஆர்.பி.உதயகுமார்
|எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்படுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,
எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தாவிட்டால் போராட்டக் களத்திற்கு செல்ல தயங்க மாட்டோம் என எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்ட கணவை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார் என்பதற்காகவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் அணுகிறார்களா? என்ற சந்தேகம் தென்தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
குறை சொல்லவோ, விவாதம் செய்யவோ அல்லாது பிறர் மீது பழி சுமத்தவோ இது நேரமல்ல. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை என்றால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையைப் பெற்று போராட்டக் களத்திற்கு செல்லவும் நாங்கள் தயங்கமாட்டோம்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.