தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் அனைவரும் ஒன்றிணையும் சூழல் வரும் - சசிகலா
|தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் அனைவரும் ஒன்றிணையும் சூழல் வரும் என சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல அரசுகள் உள்ளது. மத்தியில் ஒரே ஒரு ஆட்சி தான் இருக்க முடியும். ஒவ்வொரு மாநிலத்தில் வசித்து வருபவர்களும் அரசுக்கு வரி கட்டுகிறார்கள். இதனால் நமக்கு தேவையானவற்றை இங்குள்ள மாநில அரசு 100 சதவீதம் கேட்டு பெற உரிமை உள்ளது.
மக்கள் நம்மை நம்பி தான் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். மத்திய அரசும், மாநில அரசும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கக்கூடாது. சண்டை போடுவதற்காக மக்கள் ஓட்டு போடவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. தமிழ்நாடு போலீஸ் துறையில் நல்ல அதிகாரிகள் உள்ளனர். அவர்களை சரியாக பயன்படுத்த வேண்டும்.
மேலும், அதிமுகவில் யாரையும் நான் பிரித்து பார்க்கவில்லை, அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் அனைவரும் ஒன்றிணையும் சூழல் வரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.