< Back
மாநில செய்திகள்
திருத்தணி  முருகன் கோவில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் முற்றுகை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் முற்றுகை

தினத்தந்தி
|
27 May 2022 5:32 PM IST

திருத்தணி முருகன் கோவில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்தணி முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமை மட்டும் உள்ளூர் பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகப்பெருமானை சிறப்பு வழியில் தரிசனம் செய்வது வழக்கம். இந்தநிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை தரிசிக்க உள்ளூர் பக்தர்களுக்கு சிறப்பு வழி தரிசனத்தை கோவில் நிர்வாகம் ரத்து செய்ததால் கோவில் பணியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் லோகு டிக்கெட் வாங்காமல் ரூ.100 சிறப்பு தரிசன வழியில் செல்ல முயன்றார், பணியில் இருந்த கோவில் ஊழியர் புருஷோத்தமன் டிக்கெட் வாங்காமல் உள்ளே அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு லோகு கோவில் ஊழியர் புருஷோத்தமனை தாக்கினார். கோவில் ஊழியர்கள் சேர்ந்து லோகுவை தாக்கினர். இது குறித்து இரு தரப்பினரும் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். கோவில் ஊழியரை தாக்கிய லோகு மீது மட்டும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவில் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை திருத்தணி - சித்தூர் சாலையில் ஆவின் நிறுவன காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட தலைவர் வேலஞ்சேரி சந்திரன், ஆர்.கே.பேட்டை ஒன்றிய செயலாளர் குமார், கூட்டுறவு சங்க தலைவர் ஜெயசேகர்பாபு ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி. மு.க.வினர் கோவில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டு முற்றுகையில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன், இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோவிலில் நடந்த சம்பவத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மீது மட்டும் ஒருதலைபட்சமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக கோவில் ஊழியர்கள் மீது வழக்குபதிவு செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனையடுத்து திருத்தணி ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை லோகுவை தாக்கிய வழக்கில் கோவில் ஊழியர்கள் புருஷோத்தமன், கார்த்திகேயன், அசோக், ஜெயகிருஷ்ணா, தணிகாசலம் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

மேலும் செய்திகள்