மின் கட்டணம் உயர்வை கண்டித்து ஜூலை 23ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
|மின் கட்டணம் உயர்வை கண்டித்து ஜூலை 23ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
சென்னை,
திமுக அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், மூன்றாவது முறையாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் தி.மு.க. அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும்; நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும், வருகின்ற 23.7.2024 செவ்வாய் - கிழமை காலை 10.30 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.