அதிமுக அலுவலக மோதல் வழக்கு - சென்னை ஐகோர்ட்டில் சி.வி.சண்முகம் கூடுதல் மனு தாக்கல்
|அதிமுக அலுவலக மோதல் வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சி.வி.சண்முகம் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை,
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜுலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் உருட்டுக்கட்டை, கற்களால் தாக்கினர்.
இந்த மோதலில் 2 போலீஸார் உட்பட 47 பேர் காயம் அடைந்தனர். காவல்துறையைச் சேர்ந்த 4 வாகனம் உட்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. அலுவலகத்தில் இருந்த கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் திருடிச்சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான 4- வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அண்மையில் தெரிவித்தது.
இந்நிலையில், அதிமுக அலுவலகம் சூறை தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அதிமுக அலுவலக மோதல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணை தொடங்காதது அதிர்ச்சி தருகிறது. அலுவலகத்தில் இருந்து திருடப்பட்ட பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை.
அதிமுக அலுவலகம் சூறை தொடர்பாக உரிய விசாரணை நடத்த சிபிசிஐடி-க்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும் என்றும் டிஜிபி உத்தரவிட தவறினால் வழக்குகளை வேறு தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.