அதிமுக அலுவலக மோதல் சம்பவம்: சிபிசிஐடி போலீசாரின் இன்றைய விசாரணை நிறைவு
|அதிமுக அலுவலக மோதல் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் இன்றைய விசாரணை நிறைவு பெற்றது.
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று காலை 8.15 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.க்கள் வெங்கடேசன், ராஜபூபதி தலைமையில் சுமார் 20 போலீசார் சென்றனர். அங்கு அவர்கள் ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு செய்தனர்.
ஒவ்வொரு அறையில் இருந்தும் ஆவணங்கள், பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு இருப்பது பற்றி கணக்கு எடுத்தனர். அறைகள் சூறையாடப்பட்டு கிடக்கும் விதத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்து பதிவு செய்தனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் ஆய்வு செய்யும் காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. போட்டோவும் எடுக்கப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் சில அறைகளில் நீண்ட நேரம் ஆய்வு செய்தனர். சில அறைகளில் ஏற்கனவே என்னென்ன பொருட்கள் இருந்தன என்று கேட்டறிந்து குறித்து கொண்டனர். சில அறைகளில் அ.தி.மு.க. அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. இதற்கு முன்பு தேர்தல் சமயத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்கள், அறிக்கைகள் அனைத்தும் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் மாயமாகிவிட்டதை சோதனையின்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனையிட்டபோது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகமும் உடன் இருந்தார். அவர் சூறையாடப்பட்ட அறைகளில் காணாமல் போன பொருட்கள் பற்றி தெரிவித்தார். அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் ஆய்வு செய்தனர். இந்த சோதனையின்போது வெளியில் இருந்து யாரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.
அறைகளை ஆய்வு செய்து முடித்த பிறகு அடுத்த கட்ட விசாரணையையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். அ.தி.மு.க. தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம் உள்பட சிலரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து இன்றைய விசாரணையை நிறைவு செய்தனர்.
சம்பவம் தொடர்பாக பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மோதல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.