< Back
மாநில செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம் பேச்சை கேட்க அ.தி.மு.க.வினர் தயாராக இல்லை - கே.பி.முனுசாமி
மாநில செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் பேச்சை கேட்க அ.தி.மு.க.வினர் தயாராக இல்லை - கே.பி.முனுசாமி

தினத்தந்தி
|
16 Oct 2022 5:09 AM IST

எந்த தியாகமும் செய்யாமல் பதவிகளை அடைந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது கட்சி இணைப்பை பற்றி பேசினாலும், அவரது பேச்சை கேட்க அ.தி.மு.க.வினர் தயாராக இல்லை என்று கே.பி.முனுசாமி கூறினார்.

அ.தி.மு.க.வினர் தயாராக இல்லை

கிருஷ்ணகிரி அருகே போதிநாயனப்பள்ளியில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்ல இருப்பதாக கூறுவது தவறு. கொள்கை பிடிப்பு உள்ள ஒரு தொண்டன் எந்த சூழ்நிலையிலும் தான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு கீழ் பணியாற்றக்கூடிய நிலையில் மாறமாட்டான். ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை எந்த தியாகமும் செய்யாமல் பல பதவிகளை அடைந்தவர்.

கட்சிக்கு சோதனை வந்தபோது தன் சொந்த சொத்தான அ.தி.மு.க., அலுவலகத்தை ஜானகி அம்மாள், ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஒற்றை தலைமை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் செல்கிறார். அ.தி.மு.க. அலுவலகத்தை சூறையாடுகிறார். தற்போது கட்சி இணைப்பை பற்றி அவர் பேசினாலும், அதை கேட்பதற்கு அ.தி.மு.க.வினர் தயாராக இல்லை.

இந்தி திணிப்பு போராட்டம்

தி.மு.க. ஆட்சியாளர்களிடையே இன்று ஒற்றுமை இல்லை. தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிம்மதியாக தூங்கி எழ முடியவில்லை என வெளிப்படையாகவே கூறிவிட்டார். மாநில நிர்வாகிகளை கட்டுக்குள் வைக்க முடியாமல் திணறி வருகிறார்.

இந்த ஆட்சியின் தோல்வியை திசை திருப்புவதற்காகவே இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் என்ற ஒன்றை தி.மு.க.வினர் அறிவித்து நடத்துகின்றனர். இது அண்ணாவின் கொள்கை. அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டது. தொடர்ந்து போராடி வரும் விஷயத்திற்கு ஆர்ப்பாட்டம் எதற்கு?.

பா.ஜனதா தமிழகத்தில் தன்னை முன்னிலைப்படுத்த முயற்சிப்பதில் தவறில்லை. மத்திய பா.ஜ.க. அரசு தான் அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்தோம் என்று சொல்வதால் அதிகாரிகளுக்கு தான் சங்கடம் ஏற்படும். அது ஆரோக்கியமானது அல்ல. மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்பட வேண்டும். தி.மு.க.வை எதிர்த்து எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. மட்டுமே குரல் கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்