< Back
மாநில செய்திகள்
நில அபகரிப்பு வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

நில அபகரிப்பு வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
27 Sept 2023 3:55 PM IST

நில அபகரிப்பு வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி கிராமத்தில் கோவிந்தசாமி என்பவருக்குச் சொந்தமான 45 ஏக்கர் 82 சென்ட் நிலத்தை நில சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் உபரி நிலங்களாக அறிவித்து, அரசு கையகப்படுத்தியது. இதை எதிர்த்து கோவிந்தசாமியின் மனைவி தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோவிந்தசாமியின் மனைவி அளித்த மனுவின் அடிப்படையில், பட்டா வழங்க தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். அதை வருவாய் கோட்டாட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவரது வாரிசுகள், தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, நிலத்தை மீட்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வக்கீல், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், ஐகோர்ட்டு உத்தரவுப்படி நிலம் மீட்கப்பட்டது. நேரில் சென்று மீண்டும் ஆய்வு செய்தபோது, அங்கு சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் பல கட்டுமானங்களை ஏற்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "அரசு நிலத்தில் சட்டவிரோதமாக குடியிருந்தவர்கள், அந்த நிலத்தை மற்றவர்களின் பெயருக்கு மாற்றி உள்ளனர். இது அழுத்தத்தின் காரணமாக நடைபெற்றதா அல்லது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டார்களா என விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். அரசு நிலம் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டு, மோசடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. நிலத்தில் சட்டவிரோதமாக குடியிருந்தவர்கள், அதன்பின்னர் அவற்றில் கட்டுமானங்களை மேற்கொண்டவர்கள் உள்ளிட்டோர் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், அவர்கள் தப்பிக்க அனுமதிக்க முடியாது.

திட்டமிட்டு நிலத்தை அபகரிப்பது அதிகரித்து வருகிறது. பொது ஊழியர் என்ற பெயரில் அரசு சொத்தை அபகரிப்பதை அனுமதிக்க முடியாது. சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வழக்குப் பதிவு செய்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை நிலத்தையும், கட்டிடத்தையும் மீட்டு, பொதுப் பயன்பாட்டுக்கு தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் சட்டவிரோதமாக குடியிருப்போரை 4 வாரங்களில் அப்புறப்படுத்தி, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

மேலும் செய்திகள்