< Back
மாநில செய்திகள்
யானையை காரில் விரட்டிய அ.தி.மு.க. பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
மாநில செய்திகள்

யானையை காரில் விரட்டிய அ.தி.மு.க. பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

தினத்தந்தி
|
17 Feb 2024 10:17 AM IST

காரில் ஹைபீம் விளக்குகளை ஒளிரவிட்டபடி யானையை விரட்டிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, பாதுகாக்கப்பட்ட பகுதியான ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், காட்டு மாடுகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்களை இயக்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் சிலர் கட்டுப்பாடுகளை மீறி நள்ளிரவில் வனப்பகுதிக்குள் வலம் வரும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இதனை தடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் மிதுன் என்பவர், தனது செல்போனில் வீடியோ ஒன்றை ஸ்டேட்டஸாக வைத்திருந்தார். அதில் ஹைபீம் விளக்குகளை ஒளிரவிட்டபடி வனப்பகுதிக்குள் அவர் பயணிப்பதும், முன்னாள் நின்றிருந்த யானை ஒன்றை அவர் விரட்டியதும் தெரியவந்தது.

ஹைபீம் விளக்குகள் மற்றும் காரின் சத்தம் காரணமாக அந்த யானை பீதியில் வனப்பகுதிக்குள் உள்ள சாலையில் ஓடியது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை கண்ட வன உயிரின ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தியபோது, இந்த சம்பவம் புலிகள் காப்பக பகுதியான நவமலை பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்றதாக தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. பிரமுகர் மிதுனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்